திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவர் தினேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில்," தமிழ்நாடு முழுவதும் நிரப்பப்படாமல் இருந்த 33 சுகாதார அலுவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2014ஆம் ஆண்டில் அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்தியது. அதற்கு விண்ணப்பித்த நான் தேர்வும் எழுதினேன். ஆனால் 33 பணியிடங்களுக்கு போட்டி அதிகமாக இருந்ததால் நான் தேர்வாகவில்லை.
இருப்பினும், என் பெயர் காத்திருப்போர் பட்டியலில் எம்.பி.சி (சீர்மரபினர்) பிரிவில் முதலிடத்தில் இருந்தது. அந்தப் பிரிவில் தேர்வான ஒருவர் தனது சொந்த பணி காரணமாக அதிலிருந்து விலகினார்.
இந்த இடத்தில் என்னை நியமனம் செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதனையடுத்து, காலியிடம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி.க்கு தெரிவித்துவிட்டு, விதி முறைகள் படி தேர்வு நடைமுறை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் உறுதியளித்தார். இதனடிப்படையில் உத்தரவு ஒன்றையும் வெளியிட்டார்.
ஆனால், இதுவரை எனது கோரிக்கை ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என எனக்கு எந்த விவரமும் தெரிக்கவில்லை.
எனவே, இயக்குநர் வெளியிட்ட உத்தரவை செய்து என்னை அந்த குறிப்பிட்ட சுகாதார அலுவலர் பணியிடத்தில் நியமிக்க ஆணையிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக நேற்று (அக்.10) இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது தீர்ப்பளித்த நீதிபதி சுரேஷ்குமார், "இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அலுவலர்கள் வெவ்வேறு தகவலை அளித்துள்ளனர். இதே தவறான அணுகுமுறையைத் தான் அனைத்துத்துறை இயக்குநர்கள் மற்றும் செயலர்கள் பின்பற்றுகின்றனர்.
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் நோக்கில் முரண்பாடான தகவல்களை அளிக்கும் இவர்கள் தான் அரசின் உயர் பதவிகளில் உள்ளனர். மக்களை காக்கும் உன்னத மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர்.
மனுதாரரின் நியமனம் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை நியமிப்பது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி செயலாளருக்கு சுகாதாரத்துறை செயலர் எழுதிய கடிதத்தின் மீது நான்கு வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இரண்டு வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் இயக்குநரின் நடவடிக்கைகள் தொடர்பாக இணைச் செயலர் தகுதிக்கு குறையாத ஒரு அலுவலரை நியமித்து அனைத்து விதமான ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அதில் தவறு நடந்திருந்தால் அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுதாரரின் கோரிக்கைக்கு உரிய தீர்வை அளிக்காத தற்போதைய இயக்குநர் செல்வவிநாயகம், முந்தைய இயக்குநர் குழந்தைசாமி ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம் 2 வாரத்தில் செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.