காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் 46 கிரவுண்ட், ஆயிரத்து 600 சதுர அடி நிலமானது 99 ஆண்டுகள் குத்தகையில் தர்மமூர்த்தி ராவ்பகதூர் என்பவரால் நிறுவப்பட்ட தர்மமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளைக்கு 1900ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.
1969ஆம் ஆண்டில் அந்த நிலத்தில் கல்விப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்த அறக்கட்டளை நிர்வாகம் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற கல்வி நிலையத்தை நிறுவி செயல்பட்டிற்கு கொண்டுவந்தது.
ஏறத்தாழ ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்துவருகின்ற அப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது.
இந்நிலையில், குத்தகைக்கான ஆண்டு தொகையை கொடுக்க முடியாததால் 12.5 கிரவுண்ட் நிலம் மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், மேலும் சில கிரவுண்ட் நிலத்தை வழங்கவும் அறக்கட்டளை தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டுமுதல் 2019 வரை மாதம் தலா ஒரு லட்சத்து 25 ஆயிரமும், அதன் பின்னர் ஜூன் 2020 வரை ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்து 92 ஆயிரம் செலுத்தி வந்துள்ளது.
இது தவிர இரண்டரை கோடி ரூபாயை அறக்கட்டளை சார்பில் செலுத்திய நிலையில், நிலுவைத்தொகை, வட்டியை செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், பள்ளி வளாகத்திற்கு வந்த அறநிலையத் துறையினர் பள்ளி வளாகத்திற்குச் சீல்வைத்துச் சென்றுள்ளனர்.
ஆயித்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் பள்ளிக்கு அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் பெற்றோர்களான டி. ஜெரினா, கே. காயத்ரி, எம்.ஆர். பரகத்நிஷா, பி.எம். ஜெயலட்சுமி, ஏ. ராமசந்திரன், கே. மனோஜ்குமார், ஏ. ராமநாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், "அறநிலையத் துறை உதவி ஆணையர் எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து ஜூலை 6ஆம் தேதியே மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கும், கோயில் செயல் அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இருப்பினும், மாணவர்களின் நலனைக் காக்கும் நோக்கில் மெட்ரிக் பள்ளி இயக்குநர் செயல்படவில்லை.
மாணவர்களின் கல்வியைக் கருத்தில்கொண்டு மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்சம் 6 கிரவுண்ட் நிலத்தையாவது வழங்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உதவி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
அதேபோல, பள்ளி இயங்கும் கட்டடத்திற்குச் சீல்வைப்பதற்கு முன்பாக பெற்றோரிடம் அறநிலையத் துறையும் முறையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, கீழ்ப்பாக்கம் சீதா கிங்ஸ்டன் பள்ளி செயல்படுவதற்குத் தேவையான ஆறு கிரவுண்ட் நிலத்தை அறநிலையத் துறையிடமிருந்து பெற்று, பள்ளி தொடர்ந்து செயல்படுவதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், பெற்றோர் தரப்பு வாதங்களை நீதிமன்றம் கேட்டறிந்தது.
இதனையடுத்து தீர்ப்பளித்த நீதிமன்றம், பள்ளி வளாகத்துக்கு மாத வாடகையாக 20 லட்ச ரூபாயை நிர்ணயித்து, 2021 ஜூலை வரை செலுத்த வேண்டும். நவம்பர் மாதத்திற்கான தொகையை அறக்கட்டளை செலுத்தியவுடன், பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அறநிலையத் துறை அகற்ற வேண்டும்.
வாடகை விவகாரத்தில் கோயில் நிர்வாகமும், அறக்கட்டளையும் பேசி நல்லதொரு முடிவை சுமுகமாக எட்ட வேண்டும். அவ்வாறு ஏற்படாதபட்சத்தில், அடுத்த கல்வியாண்டில் வேறு பள்ளியை நாடும்படி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு 2021 மார்ச் மாதத்திற்குள் அறக்கட்டளை நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.