மதுரையில் 450 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, ஆர்.பி. உதயக்குமார், எம்எல்ஏ.,க்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
“தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். உலகமே அச்சப்படும் கரோனா தொற்றைத் தடுப்பதில் சிறந்து விளங்கும் முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார்.
தமிழ்நாட்டில், 2,555 பள்ளிகளின் தொடர் அங்கீகாரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து வழங்கி உள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சரின் காலம் தான் பொற்காலம் என மற்ற மாநிலங்கள் பாரட்டும் அளவிற்கு தமிழ்நாடு சிறப்பு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு பயிற்சி வரும் 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இதில் 15 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயிற்சி பெற உள்ளனர். தமிழ்நாட்டில், 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து 9ஆம் தேதிக்கு பின்பு பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்டு, 11ஆம் தேதி முதலமைச்சர் விளக்கம் அளிப்பார்.
தனியார் நீட் பயிற்சி மையங்கள் அதிக கட்டணம் வசூல் செய்வது தடுக்கப்படுமா? என்று கேட்கபட்டதற்கு, இது பெற்றோர்களுடைய குறையே தவிர எங்களுடைய குறையல்ல. பெற்றோர்களே கூடுதல் கட்டணம் செலுத்தினால் அரசு என்ன செய்ய முடியும்.
அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பாடத்திட்டத்தில் 40 விழுக்காடு குறைக்கப்படுவது குறித்து உரிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாகக் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடங்களின் வழியேதான் தேர்வு நடைபெறும்” எனத் தெரிவித்தார்.