சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "ஜனநாயகத்தை மதிக்காத அதிமுக, பாஜக கூட்டணியை நிராகரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்ததற்கு நன்றி. தனிப்பெரும்பான்மையை திமுக பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள்.
கரோனாவுக்கு போதிய தடுப்பூசி இல்லாத சூழல், நிதி பற்றாக்குறை இப்படியான இக்கட்டான சூழலில் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நல்லாட்சி தருவார்.
சட்டப்பேரவையின் உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்கும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினராக, மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக கடந்த 50 ஆண்டுகள் அவருக்கு கிட்டிய அரசியல் அனுபவத்தை கொண்டு மக்கள் விரும்பும் நல்லாட்சி தருவார்" என்று தெரிவித்தார்.