இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நிர்வாக இயக்குநர் சுதாதேவி, தமிழ்நாடு வாணிப கழகத்தில் பணியாற்றிவரும் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், "மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா (PMGKAY - II) திட்டத்தின் கீழ் ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான 5 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா ஒரு கிலோ வீதம் மத்திய தொகுப்பிலிருந்து கோவிட் -19 நிவாரணமாக கொண்டைக் கடலை (சன்னா) பி.எச்.எச்/ ஏ.ஏ.ஓய் (PHH / AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கொண்டைக் கடலை மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு என்.ஏ.எஃப்.இ.டி நிறுவனம் மற்றும் இக்கழக உள்மண்டல இயக்கம் மூலம் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கொண்டைக் கடலை டிசம்பர் 2020 மாதத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பி.எச்.எச் / ஏ.ஏ.ஓய் (PHH / AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ வீதம் வழங்கப்பட வேண்டும்.
எனவே, எதிர்வரும் 21.11.2020 முதல் அனைத்து மண்டல கிடங்குகளிலிருந்தும் சில்லறை அங்காடிகளுக்கு முன்நகர்வாக அனுப்பப்படுவதை உறுதி செய்யப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆணையாளர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தமது கடிதத்தில், மேற்படி திட்டத்தின்கீழ் பெறப்படும் கொண்டைக் கடலை அனைத்து கிடங்குகளில் இருப்பில் வைக்கவும், முன்நகர்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான விவரங்கள் குறித்து ( Pos ) விற்பனை முனைய இயந்திரத்தில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா (PMGKAY - II) திட்டத்தின் கீழ் பெறப்படும் கொண்டைக் கடலையினை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்க தனியே அறிவுரை வழங்கப்படும்.
எனவே சம்மந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர்கள் / மண்டல மேலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து களப்பணியாளர்களுக்கும் முன்நகர்வு மற்றும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் கொண்டைக் கடலை விநியோகம் செய்யப்படுவது குறித்தும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மற்றும் விநியோகிக்கப்படவுள்ள கொண்டைக் கடலை விவரத்தினை உரிய கிடங்கு பதிவேடுகளில் பராமரிக்கவும் உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.