தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவராகவும், அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன். இவரது மகன் பிரவீண். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த போது தன் நண்பா்கள் திலக், கோவையை சேர்ந்த வீர சுரேகா மற்றும் 3 மாணவிகள் உட்பட 6 பேர் காரில் ஈரோடு நோக்கி சென்று விட்டு, மீண்டும் கோவை நோக்கி திரும்பி வரும் போது பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆதியூர் பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீர சுரேகா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் பிரவீண் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) (அஜாக்கிரதையால் மரணம் ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்.4 நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கில் தொடர்புடைய பிரவீண் நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவரது தரப்பில் ஆஜராக இயலாத காரணத்திற்காக தனி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு சாலை விபத்து வழக்கில் சந்தேகத்தை கிளப்பும் திருப்பூர் வழக்கறிஞர் சிவப்பிரகாசம் செய்தியாளர்களை சந்தித்து பேசினாா்.
அப்போது அவா் கூறுகையில், இவ்வழக்கு விசாரனையில் பல்வேறு தகவல்கள் முன்னுக்கு பின் முரனாக இருப்பதாகவும், கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது வேட்பு மனுத்தாக்கல் செய்த ஜெயராமன் தனக்கு 7 கார்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார், ஆனால் 2016 அக்டோபர் மாதம் நடந்த சாலை விபத்துக்கு பின் இரண்டு மாதத்தில் தன்னுடைய கார் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காரினை திரும்பபெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமணிடம் 2016 கார் விபத்து குறித்த கேள்விக்கு அது தன்னுடைய கார் இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும், இந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு குறித்த தகவல்களை எடுத்து விசாரித்ததாகவும் , அதில் பொள்ளாச்சி ஜெயராமன் அவர் தெரிவித்ததற்கும் வழக்கு ஆவணங்களில் இருப்பதற்கும் பல தகவல்கள் முன்னுக்கு பின் முரனாக இருப்பதாக தெரிவித்தாா்.