திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கட்டம்பட்டி, அன்னூர், ஆனையூர், கெம்பநாயக்கன்பாளையம், சொக்கம்பாளையம் பகுதிகளில் உள்ள 485 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதி வண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான தனபால் வழங்கினார்.
பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய தனபால், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. தான் வெற்றிபெற்றால் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில் அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு கிராமங்களுக்கும் தார்சாலை வசதி செய்து தரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது அதனடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கூறியுள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ள நிலையில் இன்னும் வரும் காலங்களில் தன்னால் முடிந்த அனைத்து பணிகளையும் மக்களுக்கு செய்துகொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி அவிநாசி தொகுதியில் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என கூறியிருந்த நிலையில் தனபால் அதற்கு பதிலளித்துள்ளார்.