திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஊத்துக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டை மராமத்து பணி செய்வதற்காக தேவையான பொருள்களை வாங்க மூலனூர் சென்றுவிட்டு மாலை தனது வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக்திவேல் கூச்சலிட்டார். இதனால் ஆவேசமடைந்த அவர்கள், இரும்பு கம்பியால் அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். அதைத் தொடர்ந்து, சக்திவேல் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 3.1/2 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார்.
இந்த நிலையில், காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான வகையில் கரூர் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், சக்திவேல் வீட்டில் திருடியவர்கள் என்பதும், இவர்கள் சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் (28) கரூரைச் சேர்ந்த சங்கர் (27) தெரியவந்தது. திருட்டு வழக்கு ஒன்றில் கோவை சிறையில் இருந்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த மூலனூர் காவல்துறையினர், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் அரிசியைக் கடத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது: 2 டன் அரிசி பறிமுதல்