திருப்பூர் மாவட்டத்தில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் காட்டுத் தீ போல் பரவியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அம்மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி, மாநகர காவல் துறையிடம் இதுகுறித்து புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் பிரிவு மூலமாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவதூறாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரப்பியதில், சட்ட விழிப்புணர்வு, ஊழல் தடுப்பு மையத்தின் நிர்வாகிகள் திருப்பூரைச் சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், தாராபுரத்தைச் சேர்ந்த வித்யா, உடுமலையைச் சேர்ந்த ராம் மோகன் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவதூறாக வீடியோ பரப்பிய மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் திருப்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இவர்கள் மூவரையும் நவம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.