தேனி மாவட்டம் போடி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு 13வயதில் முத்தரசன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், போடி அருகேயுள்ள கொட்டக்குடி ஆற்றில் குளிப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முத்தரசன் சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து மாணவனை மீட்க வந்த தீயணைப்பு துறையினர் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு விரைந்து வந்த முத்தரசனின் சித்தப்பா பரமசிவம் தனது அண்ணன் மகனை மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆற்றில் இறங்கி அவனை தேட முயன்றுள்ளார்.
பாதுகாப்பு ஏதுமின்றி ஆற்றில் இறங்கியதால் தீயணைப்புத் துறையினர் கண்முன்னே பரமசிவம் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். பரமசிவம் நீரில் மூழ்குவதை கண்ட தீயணைப்புத் துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் பரமசிவனும் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். தற்போது இறந்த இருவரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.