திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலமும் உள்ளது. வருடந்தோறும் இந்த கோயிலில் சித்திரை மாத திருவிழா ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம். பிரம்மாண்ட இத்திருவிழாவில் 5 கிராம மக்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வர். மேலும் கோயிலின் அருகே உள்ள காலி இடத்தில் திருவிழாக்களின் போது சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், தற்காலிக கடைகள் உள்ளிட்டவைகள் காணப்படும்.
இந்நிலையில், இந்த காலி இடத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல், காவல் துறைக்கு மாற்ற முயற்சி செய்வதை கண்டித்து, மங்கலம் சாலை பெரிய ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டதில், ”கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம்; தமிழ்நாடு அரசே கோவில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றாதே” என பாதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட 300 -க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே அவர்கள் போரட்டத்தை கைவிட்டனர். போராட்டமானது சுமார் 2 மணி நேரமாக இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்தானது சிறிது பாதிப்புக்குள்ளானது.
இதையும் படிங்க: பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!