திருப்பூர்: தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் மற்றும் பீக் ஹவர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால், பல மடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டிய காரணத்தால், அதனை எதிர்த்து மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
அதன்படி, இன்று (டிச.28) திருப்பூர் குமரன் சிலை முதல் மாநகராட்சி வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அமைப்பினரைக் கொண்ட 37 சங்கங்கள் பங்கேற்றனர். மேலும், ஆயிரக்கணக்கான நபர்கள் மனிதச் சங்கிலியாக கைகோர்த்து நின்று, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்து ரத்தினம், முன்னாள் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்து ரத்தினம், “தமிழகத்தில் 37 தொழில் அமைப்புகள் இணைந்து மின் கட்டண உயர்வுக்கு எதிராக 8 கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழக அரசு தொழில்துறையினரைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
மேலும் திருப்பூரில் 70 சதவீதம் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. தொழில்துறையினரை அழைத்து தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வருகிற ஜனவரி 10ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிடில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். தமிழக அரசு கண்துடைப்புக்காக பெயரளவுக்கு கோரிக்கைகளை குறைத்துள்ளது” என தெரிவித்தார்.
பின்னர் அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில், “தமிழ்நாட்டில் தொழில்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், மின் கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வுகள் மேலும் சிரமத்தை உருவாக்கியுள்ளன. 3 மாதங்களாக பல போராட்டங்களை நடத்தியும், திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல்படி, இந்த போராட்டத்துக்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவத்துள்ளோம். திமுக அரசு மின் கட்டண உயர்வினை குறைக்க வேண்டும்" என தெரிவித்தார்.