திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் திருப்பூர் 60 அடி ரோட்டில் பனியின் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று(நவ-3) இரவு வழக்கம் போல வேலைகளை முடித்துவிட்டு குடோனை பூட்டி சென்றுள்ளார். இரவு திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
அந்த மழையின்போது ஏற்பட்ட இடி பனியன் குடோன் மீது இறங்கி அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அருகிலிருந்தவர்கள் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனியன் துணிகள் தீயில் கருகிச் சேதமடைந்தது. இது குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.