திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த ஓமலூர் பகுதியில் செந்தில் வடிவேலன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் சிவபிரகாஷ் என்பவர் நூற்பாலை நடத்திவருகிறார். 11 வருடங்களாக செயல்பட்டுவரும் நூற்பாலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையில் இரவு நேர தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று காலை திடீரென நூற்பாலை இயந்திரத்தில் தீப்பிடித்தது. இதனைப் பார்த்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர், ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனையடுத்து நூற்பாலையை விட்டு வெளியே வந்த தொழிலாளர்கள் உடனடியாக உரிமையாளர் சிவப்பிரகாசுக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உரிமையாளர் சிவபிரகாஷ் திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர், ஆனால் தீ வேகமாக பரவியது.
இதனையடுத்து அவினாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30 வீரர்கள் நான்கு வண்டிகளில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட தனியார் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து அவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் இயந்திரங்கள், பஞ்சு, நூல்கள் மற்றும் கட்டடம் உட்பட பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 21 பேர் மீட்பு!