திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 600 பவுன் நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை தொடர்பாக காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்பி தலைமையில் 11 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் அனில் சிங் என்பவரை டெல்லி விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கள்ளிப்பாளையம் வங்கியில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாக ஒத்துக்கொண்டார். இதனையடுத்து ஹரியானா சென்ற தனிப்படை காவல் துறை கைது செய்யப்பட்ட கொள்ளையன் அனில் சிங்கை பல்லடம் அழைத்து வந்தது. பின்னர் கொள்ளையன் அனில் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 6 நாட்கள் காவலில் விசாரிக்க காவல் துறைக்கு மாஜிஸ்திரேட்டு அனுமதியளித்தார்.
காவல் துறையினர் அவரை தனி இடத்தில் வைத்து மேற்கொண்ட விசாரணையில், கொள்ளையடித்துவிட்டு அனந்தபூர் சென்று அங்கிருந்த ராமகிருஷ்ணன் ஆச்சாரி, ராமன் ஜி அப்பா என்பவர்களிடம் கொள்ளையடித்த நகைகளை விற்பனைக்கு கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். நகையை விற்பதற்காக அவர்கள் இருவரும் சேலம் வந்ததை அறிந்த தனிப்படையினர் அவர்கள் இருவரையும் சேலத்தில் வைத்து கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 85 பவுனை மீட்டனர்.
இந்த வங்கி கொள்ளையில் ராஜஸ்தானைச் சேர்ந்த இசார்கான் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறைக்கு தெரியவந்ததையடுத்து ராஜஸ்தான் மாநிலம் சென்ற காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் அங்கு இசார்கானை கைது செய்து அவனிடம் இருந்த 11 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இசார்கானை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுடன் அழைத்து வர உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனில் சிங்கிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில் காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான தனிப்படை காவல்துறை அவரை இன்று பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: 125 ரூபாயில் மதுரையை சுத்தலாம் - அரசு போக்குவரத்தின் அசத்தல் அறிமுகம்