டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கி சுமார் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்த வழிப்பறிகும்பல்! - Tiruppur district news in tamil
தாராபுரம் அருகே நள்ளிரவில் விற்பனை தொகையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த அரசு டாஸ்மாக் மதுபான கடை ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சத்தியமங்கலம் மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார், தாராபுரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றிவருகிறார். இவர், வழக்கம் போல் வேலைகளை முடித்துவிட்டு விற்பனை தொகை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 310 ரூபாயுடன் தனது இருசக்கர வாகனத்தில் தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தச்சன்புதூர் பொள்ளாச்சி சந்திப்பு அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த மூன்றுபேர் தங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சிவகுமாரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிவகுமார் செல்போன்மூலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்ட தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயராம் விசாரணை நடத்தி மூன்று பேர் கொண்ட வழிப்பறி கும்பலைத் தேடி வருகின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் 25ஆம் தேதி கடையில் விற்பனை வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த வழிப்பறி கும்பல் துணிக செயலை நடத்தியிருக்கலாம் எனக் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், தாராபுரம் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியை கழுத்தில் இருந்த 7 சவரன் தாலிச்சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற சம்பவமும் அதே நாளில் நடைபெற்றுள்ளது.
ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தாராபுரம் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று மக்களும், டாஸ்மாக் கடை விற்பனையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொள்ள தனி வாகனத்தை அரசு ஏற்படுத்தி அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என டாஸ்மாக் கடை ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பண விவகாரத்தில் தாய், மகனை வெட்டிய கட்டட மேஸ்திரி கைது!