திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் ஆயிரத்து 800க்கும் அதிகமான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் மாதம் தோறும் 45 லட்சம் கறிக்கோழிகள் சென்னை, மதுரை ஆகிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கறிக்கோழி சாப்பிட்டால் கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்ற தவறான தகவல் சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவியது.
இத்தகவலை அடுத்து கறிக்கோழிகள் விற்பனை படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால் விலையும் குறைந்தது. விலை குறைந்தாலும் பொதுமக்கள் கறிக்கோழிகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். கடந்த சில வாரங்களாக வெளிமாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படவில்லை.
தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கறிக்கோழிகள் அதிகளவில் தேக்கம் அடைந்துவிட்டன. இதன் காரணமாக இறைச்சி கடை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் கறிக்கோழியால் கரோனா வைரஸ் பரவுகிறது என்ற தவறான தகவல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை இறைச்சி கடை வியாபாரிகள் இலவசமாக வழங்கினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இரண்டாவது நபருக்கு கரோனா தொற்று!