திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக இருசக்கர வாகன திருட்டு நடைபெற்றுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. அதன்பேரில் வாணியம்பாடி நகர காவல் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான தனிப்படையினர் வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இளைஞர் ஒருவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது அவர்களைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் இளைஞர் தப்பிக்க முயற்சி செய்தார்.
இருப்பினும், அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த ஜெகன்குமார் என்பதும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.
மேலும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, கடந்த சில நாள்களாக பல்வேறு இடங்களில் தொடர் இரு சக்கர வாகன திருட்டுச் சம்பவத்தில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரால் ஆம்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து அவரைச் சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை கடத்த முயற்சி - ஆட்டோ ஓட்டுநருக்கு விருந்து வைத்த பொதுமக்கள்!