பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி! - Tirupattur Palar River water flow rising
திருப்பத்தூர்: வாணியம்பாடி பாலாற்றில் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகின்றன.
அதன் காரணமாக தற்போது பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றன. இதன் தண்ணீரானது திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், அம்பலூர், கொடையாஞ்சி வழியாக தற்போது வந்து கொண்டிருக்கின்றன. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆந்திரா வழியாக வரக்கூடிய பாலாற்றில் 22க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் ஆந்திர அரசு கட்டி உள்ளன.
இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா வழியாக வரக்கூடிய பாலாற்று நீர்வரத்து இன்று வரை தமிழ்நாடு பகுதிக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணையில் நீர் தேங்கி நிற்கின்றன. ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையில் இருந்து வரக்கூடிய முக்கிய பாலாற்று நீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்பொழுது வரக்கூடிய மண்ணாற்று நீர் மட்டுமே பாலாற்றில் வந்து கலந்து பாய்ந்து ஓடுகிறது.
பாலாற்றில் வெள்ளம் வருவதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடையாஞ்சி பகுதிக்கு சென்று பாலாற்றில் நீர் வருவதை கையெடுத்து கும்பிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க...தேவர் தங்கக் கவசத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஓபிஎஸ்!