திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வசிப்பவர், ராஜா நவநீதம் மகன் பிரபாகரன் (23). இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், திருப்பத்தூர் நகர் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி மகள் நிவேதா (22) என்பவருக்கும் பிரபாகரனுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே அதே பகுதியைச் சேர்ந்த பழனி தீபாவதியின் மகள் சரிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (20) என்பவருடன் பிரபாகரனுக்கு முறை தவறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த பிரபாகரனின் முதல் மனைவி நிவேதா, பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவருக்கும் சமரசம் பேசப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலைத்தில் புகார் ஒன்றினையும் நிவேதா அளித்துள்ளார். ஆனால், இவை எவற்றுக்கும் பிரபாகரன் கட்டுப்படாததால் முதல் மனைவி நிவேதா பிரபாகரனை விட்டு விலகியுள்ளார்.
இதனால், தன்னுடைய முறை தவறிய காதலி சரிதாவுடன் பிரபாகரன், ராணுவத்திற்கு செல்லாமல் கடந்த இரண்டு வருடமாக அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திடீரென முதல் மனைவி நிவேதாவுடன் மீண்டும் பிரபாகரனுக்கு உறவு ஏற்பட்டுள்ளது. எனவே, இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
இதனை அறிந்த இரண்டாம் காதலி சரிதா, தன்னுடைய எதிர்காலம் பாழாகிவிடுமோ என்கிற எண்ணத்தில் மனமுடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோலார்பேட்டை காவல்துறையினர், சரிதாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறை தவறிய பழக்கத்தால் ஏற்பட்ட பெண்ணின் விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் தாய், மகன்கள் கொலை: வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு