திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கந்திலி வீரப்பன் வட்டத்தைச் சேர்ந்தவர் விராகு கவுண்டர் மகன் வீரப்பன் (90). இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் நான்கு பெண் பிள்ளைகள் என மொத்தம் 7 பேர் உள்ளனர்.
இவர்களில் இரண்டாவது மகன் நாகராஜ் என்பவர் 2012ஆம் ஆண்டு தந்தை வீரப்பனுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி ஒருசில வெற்று பேப்பர்களில் கைநாட்டு வாங்கிச் சென்றுள்ளார்.
எனினும் அவருக்கு முதியோர் உதவித் தொகை மட்டும் கிடைக்கவே இல்லை. இது தொடர்பாக அவர் மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது, முதியோர் உதவித் தொகை கிடைக்க சில நாள்கள் ஆகும் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வீரப்பனுக்கும், நாகராஜூக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வீரப்பனை தந்தை என்றும் பாராமல் நாகராஜ் வீட்டிலிருந்து துரத்திவிட்டார்.
சில நாள்கள் கழித்து உடல்நிலை சரியில்லாமல் நாகராஜூம் இறந்துள்ளார். வீரப்பன் தன்னுடைய சொத்து வரி செலுத்த சென்றபோது தன்னுடைய மகன் நாகராஜ் ஒன்றரை ஏக்கர் நிலத்தை அவருடைய மருமகன் அன்பரசு வின் பெயரில் மாற்றியுள்ளது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் இந்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி வீரப்பன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து வீரப்பன் கூறுகையில், “முதியோர் பணம் வாங்கித் தருவதாக கூறி என்னுடைய மகன் நாகராஜ் என்னை ஏமாற்றி ஒன்றரை ஏக்கர் நிலத்தை அபகரித்து அவருடைய மருமகன் அன்பரசுவின் பெயரில் மாற்றிவிட்டார். என்னுடைய முதுமை மற்றும் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு இந்த நிலத்தை மீட்டு தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : கோவையில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை - எஸ்.பி. வேலுமணி