திருப்பத்தூர்: தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (45). இவருக்கும் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை, முனியன் கொல்லை பகுதியைச் சேர்ந்த அலமேலு என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு ஆண்டிலேயே தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், மனைவி அலமேலுவிடம் அவரது குடும்பத்தாரிடம் இருந்தும் சொத்தைப் பிரித்து வாங்கி வருமாறு துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அலமேலு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆறு மாத கர்ப்பிணியாக கணவனைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று (ஏப்.21) மனைவி வீட்டிற்கு வந்த ராஜகோபால் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை மீண்டும் சேர்ந்து வாழ அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு வர மறுத்த மனைவி அலமேலுவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு கால்களுக்குக் கீழே சரமாரியாக வெட்டினார்.
இதனைத்தடுக்க வந்த மாமனார் சந்தானம், மாமியார் சின்னத்தாய் ஆகியோரையும் வெட்டி விட்டு தப்பிச் சென்று அங்குள்ள ஒரு மலைப்பகுதியில் பதுங்கியிருந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம மக்கள், ராஜகோபாலை விரட்டி பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, கத்தியால் வெட்டப்பட்டு கிடந்த மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை முயற்சியில் ஈடுபட்ட ராஜகோபாலை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மோடியால் வந்த தகராறு - திமுக கவுன்சிலரை கைது செய்யக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!