திருப்பத்தூர்: கனமந்தூர் பகுதியிலிருந்து பெரிய வெங்காயப் பள்ளிக்குச் செல்லும் சாலை அருகே உள்ள புதிய கட்டடத்தில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர்கள் அகிலன், சுனில் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் வேணுகோபால், கிராம உதவியாளர் பிரகாஷ் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. பின்னர் புதிய கட்டடத்தை பரிசோதித்ததில் 18 அட்டைப் பெட்டிகளில், ஒரு பெட்டிக்கு 96 பாட்டில்கள் என மொத்தம் 1728 வெளி மாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், இந்தப் புதிய கட்டடம் திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் பகுதியில் வசித்து வரும் பிரபல சாராய வியாபாரி தவமணிக்கு சொந்தமானது என்பதும், இரவில் கள்ளச் சாராய வியாபாரத்திற்காக இந்த கட்டடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. பின்னர் பிரபல கள்ளச் சாராய வியாபாரி தவமணியை காவல் துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 60 ஆண்டுகள் கழித்து கட்சி இடத்தை மீட்ட காங்கிரஸ்; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!