திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராமலு. இவர் ஓனாங்குட்டை பகுதியில் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக 10க்கும் மேற்பட்ட மாடுகளும், ஆறு ஆடுகளும் இருந்தன.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, நள்ளிரவில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுப் பண்ணையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆறு ஆடுகளை சிறுத்தை கடித்துக் குதறியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஆடுகள், ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உயிரிழந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீராமலு, உடனடியாக வனத் துறைக்குத் தகவல் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் சிறுத்தையைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் அவரது மாட்டுப் பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை, கன்றுக்குட்டியின் பின்புற பகுதியைக் கடித்து குதறியுள்ளது. சிறுத்தையின் நடமாட்டம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்தி தலைமையிலான வனத் துறையினர், ஓனாங்குட்டை பகுதியில் முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் கம்பியில் சிக்கி 4 வயது யானை உயிரிழப்பு