திருப்பத்தூரை அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பழைய அத்திகுப்பம் கிராமத்தில் 150 குடும்பங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். அப்பகுதியில் இறந்தவர்களின் சடலத்தை அதே பகுதியிலுள்ள பாம்பாற்றின் கரையோரம் 50 ஆண்டிற்கும் மேலாக அடக்கம் செய்து வந்துள்ளனர்.
இதில் சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையைத் தனிநபர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து, கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லாததால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய பெரிதும் அவதிப்பட்டுவந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 29) பழைய அத்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி (75) என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சடலத்தை சாலையில் வைத்து ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் மதனலோகன், வட்டாட்சியர் மோகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து இறந்தவரின் சடலத்தை ஆற்றின் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க...இறுதிக்கட்ட பரிசோதனையில் கரோனாவுக்கு எதிரான mRNA-1273 தடுப்பூசி மருந்து!