நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோர் தங்களது உயிரைப் பணயம் வைத்து சேவை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் ஆகியோர் புறநோயாளிகளைப் புறக்கணித்து சுமார் 20 நிமிடம் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் பேசுகையில், "மருத்துவர்கள் தொடர்ந்து மக்களுக்காகப் போராடிவருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் மருத்துவர் இந்த நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்து இருக்கக்கூடிய நிலையில் அவரை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்தனர்.
இதையும் பார்க்க: என்னை இங்கே புதையுங்கள்... டாக்டர் சைமனின் கடைசி ஆசை!