திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரசு மலைவாழ் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப்பயின்று வருகின்றனர். மேலும் அரசு சார்பில் ஐந்து பேர் விடுதியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விடுதியில் சண்முகம் மனைவி ருக்மணி (57) என்பவர், இரவு நேர பெண் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று (ஜூன் 28) இரவு விடுதியை சுற்றி வரும்பொழுது, எதிர்பாராதவிதமாக கட்டுவிரியன் பாம்பு ருக்மணியை கடித்துள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உடலுக்குள் விஷம் அதிகரித்ததால் ருக்மணி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எனவே, பிரேத பரிசோதனைக்காக மருத்துவர்கள் உடலை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஏலகிரி மலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சில தினங்களுக்கு முன்பு, இங்குள்ள பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கும் உணவின் தரம் குறித்தும், ஆட்கள் பற்றாக்குறை குறித்தும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் பல்லி விழுந்த பழச்சாற்றை அருந்தியவர் மருத்துவமனையில் சிகிச்சை - கடையில் ரெய்டுவிட்ட அலுவலர்கள்