வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (ஆக.20) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி. வீரமணி கூறியதாவது, "திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர வாய்ப்பில்லை. காரணம், ஒருங்கிணைந்த மாவட்டமாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் இருப்பதால் நிர்வாக வசதி காரணமாக முதலமைச்சர் வேலூர் வந்து கரோனா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்" என்றார்.
தென்காசி மாவட்டத்திற்குச் சென்ற முதலமைச்சர் ஏன் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "தென்காசி மாவட்டம் முன்னதாகவே பிரிக்கப்பட்டது. அதற்காக நிர்வாக அமைப்புகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் கடைசியாகப் பிரிக்கப்பட்டதால் இன்னும் நிர்வாக அமைப்புகள் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதன் காரணமாகவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்ற அவர், தான்கூட ஒருங்கிணைந்த மாவட்டத்தின் அமைச்சராகத்தான் இருப்பதாக நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு