திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவர் வாணியம்பாடி கச்சேரி சாலைப் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணவேணி சகோதரர் சென்னையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகக் கூறிவிட்டு அவரைப் பார்க்கச் சென்றுள்ளார்.
இதையடுத்து, முனிசாமி மனைவியின் குழு லோன் சம்பந்தமாக, அவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது மனைவி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து கச்சேரி சாலையில் உள்ள தொழிற்சாலையின் பின்புறம் அமைந்துள்ள பாலாற்றில் கரையோரம் பாழடைந்த ஒரு அறையில் முனிசாமி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து கொலையா, தற்கொலையா? எனத் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.