தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த முறை ஒரு அறைக்கு 14 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்டன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இந்த ஆண்டு அவை 7 மேசைகளாக குறைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை தேவையான முன்னேற்பாடுகள், இட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 1603 வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவிர, விவிபேட் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்காக நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமடைந்து வருகிறது. திருத்தப்பட்டியல் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும்” என்றார்.
இதையும் படிங்க:மேற்கு வங்கத் தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர்-பாஜக வார்த்தைப் போர்