கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு வரையிலான மார்க்கத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் விமானங்கள் 45 விழுக்காட்டுப் பயணிகளுடன் இயக்கலாம் எனப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் நவம்பர் 24ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி-பெங்களூரு இடையிலான இண்டிகோ விமான சேவை வருகிற 8ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
அதன்படி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாள்கள் விமான சேவை நடைபெறும். பெங்களூருவிலிருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும் தூத்துக்குடி விமானம், காலை 9 மணிக்கு வந்தடையும். அதே போல், தூத்துக்குடியிலிருந்து 9.20 மணிக்கு பெங்களூரு கிளம்பும் விமானம் 11 மணியளவில் அங்கு சென்றடையும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.