கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் மெல்ல மெல்ல பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் கரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கினால் நலிவடைந்த ஏழை எளியோருக்கு இலவச அரிசி பைகள் வழங்கும் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (செப்.20) நடைபெற்றது.
மத்திய பாகம் காவல் எல்லைக்குட்பட்ட குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமை தாங்கி, இலவச அரிசி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மத்திய காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.