தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான 13 கடலோர கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்துவருகின்றனர். இதிலும் குறிப்பாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் தளமாகக்கொண்டு சுமார் 260 விசைப்படகுகள் மற்றும் நூற்றுக்கணக்கான நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்துவருகின்றனர்.
தூத்துக்குடிக்கு முத்து நகரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதற்கு காரணம் இங்கு முத்துக்குளி, சங்கு குளி தொழிலாளர்கள் அதிகம் வசிப்பதுவே. தற்பொழுது முத்துக் குளித்தல், சங்கு குளித்தல் தொழில் நலிவடைந்ததை தொடர்ந்து அந்த மீனவர்களும் மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு தங்களது வாழ்வாதாரத்தை மீன்பிடித்தலோடு பின்னியமைத்துக்கொண்ட இவர்களுக்கு வாழ்வாதார முதலீடு படகுகள்தான்.
படகு கட்டுதல் தளம் தருவைகுளம், திரேஸ்புரம், தூத்துக்குடி கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ளது. சுமார் பத்திற்கும் மேற்பட்ட கப்பல் கட்டும் தளங்களில் 700 பேர் பணி செய்துவருகின்றனர். பலகட்ட கோரிக்கைகளுக்கு அடுத்து மீன்பிடி தொழிலுக்கு மத்திய அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் நாள் ஒன்றுக்கு நிபந்தனையின் அடிப்படையில் 50 நாட்டுப் படகுகள் மட்டும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகு சார்ந்த படகு கட்டும் தொழிலும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி சுமார் 700 குடும்பங்கள் உள்ளதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவுள்ளது.
படகு ஒவ்வொன்றும் அதிகபட்சமாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என்பதால் , தற்போது இந்த தொழிலில் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. படகு கட்டும் தொழிலை நம்பி தச்சர், மெக்கானிக், எலக்ட்ரீசியன், வெல்டிங், பெயிண்டர், சுத்தம் செய்பவர் உள்ளிட்ட பல நிலை தொழிலாளர்களும் இருப்பதால் படகு கட்டும் தொழில் தூத்துக்குடியின் உயிர்நாடி என்றே சொல்லலாம்.
தற்போது நிலவும் கரோனா ஊரடங்கால் படகு கட்டும் தொழிலை மேற்கொள்ள முடியாமல் இத்தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே கையில் எடுக்கப்பட்ட படகுகட்டுதல் வேலையும் பாதியில் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் டேனியல் நம்மிடையே தெரிவிக்கையில், படகு கட்டுதல் தொழில் என்பது தினசரி கூலி தொழிலாளி தான். அன்றாடம் கிடைக்கும் கூலி வைத்துதான் குடும்பத்திற்கு தேவையானதை ஈட்டமுடியும். தினசரி 500 லிருந்து 1000 ரூபாய் வரை கிடைக்கும் தொகை தான் தங்களின் வாழ்க்கையை நகர்த்த உதவிவந்தது.
தற்பொழுது ஊரடங்கினால் தச்சுத்தொழில் முற்றிலும் முடக்கப்பட்டு இருப்பதால் படகு கட்டமுடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்த நிவாரண தொகை ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை. எனவே தச்சுத் தொழிலை காப்பதற்காக தமிழ்நாடு அரசு கூடுதல் நிவாரணம் வழங்கி உதவி செய்யவேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் கட்டுமான தொழிலுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தந்தாலும், படகு கட்டுமான தொழிலை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் சூழல் உள்ளது. ஏனெனில், குறைந்தபட்சம் 10 நபர்கள் இருந்தால் மட்டுமே இத்தொழிலை தொய்வின்றி மேற்கொள்ளமுடியும். ஆனால், தடை உத்தரவு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் நான்கு பணியாளர்களை வைத்துத்தான் கட்டுமானம் உள்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படகுகளை கட்டிகொடுக்கமுடியாமல் திண்டாடி வருகிறோம். தற்போது கட்டுபாடுகள் தளர்வு கொடுத்தும் பணிகளை விரைவாக செய்யமுடியவில்லை எனில் எங்கள் நிலைமை இன்னமும் மோசமாகும் எனக் கூறினார்.
இதையும் பார்க்க: விமான எரிபொருள் விலை கடும் சரிவு!