தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாமல் போடப்பட்ட 46 ஆழ்துளை கிணறுகளை ஒவ்வொரு பகுதி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் மூடியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 42 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் அனுமதி பெற்று இயங்கிவருகின்றன. இந்த ஆலைகள் முறையான ஆவணங்கள் பெற்று இயங்கி வருகின்றனவா? நிலத்தடி நீர் எடுப்பதற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியபடி இந்திய தர நிர்ணய சான்றிதழ், உணவு பாதுகாப்பு துறை தர சான்றிதழ் உள்ளதா? என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமராமத்து பணிகளின் மூலமாக குளம், கால்வாய்களிலும் நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டாம் கேட் பகுதியில் சுரங்க வழிப் போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கப்பணிகள் ஒன்றாம்கேட் பகுதி வரையிலும் வரயிருப்பதால், ஒன்றாம் கேட்டை நிரந்தரமாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க... தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு!