தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் அருண்குமார் - ஸ்ரீஜா. பட்டயப் பொறியாளர் அருண்குமார், இளங்கலை ஆங்கில பட்டப்படிப்பு படித்துவரும் திருநங்கையான ஸ்ரீஜாவை இரண்டு வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து 2018 அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
ஒரு ஆண், திருநங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்டு இல்லற பந்தத்தில் இணைந்த அந்த சுவாரஷ்ய நிகழ்வு குறித்தும் அதைத்தொடர்ந்து அந்த தம்பதியினருக்கு சமூகத்தில் எழுந்த எதிர்ப்புகள் குறித்தும் அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
செய்தியாளர்: திருநங்கையான ஸ்ரீஜாவை முதன் முதலில் பார்த்து காதலில் விழுந்த தருணம் குறித்து சொல்லுங்கள்?
- அருண்குமார்: முதன் முதலில் ஸ்ரீஜாவை நான் பார்த்தது ஒரு ஃபேன்ஸி கடையில் வைத்துதான். அதைத் தொடர்ந்து அவரை பல்வேறு இடங்களிலும், கோயில்களிலும் வெளியிலும் சந்தித்து நான் பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். தொடர்ந்து அவரிடம் எனது காதலை வெளிப்படுத்தி- இருவரும் காதலிக்கத் தொடங்கினோம்.
செய்தியாளர்: உங்கள் இருவருக்குமான காதல் திருமணம் குறித்தும், அதைத் தொடர்ந்து எழுந்தத் தடைகள் குறித்தும் கூறுங்கள்?
- அருண்குமார்: முதலில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது அதை கோயிலில் வைத்து செய்வது என தீர்மானித்தோம். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துவிட்டு கோயிலுக்குச் சென்றபோது அரசு அலுவலர்கள் எங்களது திருமணத்தை நடத்த ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து ஸ்ரீஜாவின் சமூகத்தைச் சேர்ந்த பூசாரி உள்பட பலர் எங்களுக்கு முன்நின்று திருமணச் சடங்குகளை நிறைவேற்றி பலகட்ட எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தாண்டி எங்களுக்கு திருமணம் நடத்திவைத்தனர். அதைத் தொடர்ந்து திருமணப் பதிவு செய்ய நாங்கள் சென்றபோது எங்களின் திருமணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்தே நீதிமன்றத்தை அணுகி நியாயம் தேட முடிவு செய்தோம். அதனடிப்படையில் இன்று தீர்ப்பு வந்திருப்பது எங்களுக்கு நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: இருவரின் காதலும் திருமணத்தில் ஒன்று சேர்ந்த பொழுது அதுவரையில் நீங்கள் சந்தித்த சவால்கள், தடைகள் என்னென்ன?
- ஸ்ரீஜா: எங்களது திருமணத்தை பதிவு செய்ய அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தோம். ஆனாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இறுதியில் நீதிமன்றத்தின் மூலமாகத்தான் இதற்கு தீர்வு எட்ட முடியும் என நாங்கள் முடிவு செய்தபோது வழக்குத் தொடர்ந்து நடத்தும் அளவுக்கு எங்களுக்கு பண வசதி கிடையாது. ஆகவே பணத்திற்கு நாம் என்ன செய்வது என யோசித்தோம். அந்த நேரத்தில்தான் இலவச சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்குத் தொடரலாம் என முடிவு செய்தோம். இறுதியில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எங்களின் திருமணத்தை அங்கீகரித்து பதிவு செய்து சான்று வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தோம். அந்த வழக்கின் அடிப்படையில் இன்று எங்களின் திருமணத்தை அங்கீகரித்து திருமணச் சான்று வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் தீர்ப்பினை எங்களது குடும்ப உறவினர்களும், அருண்குமாரின் நண்பர்களும், எனது சமூகத்தினரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். அவர்கள் இதை வரவேற்று கருத்து கூறும் பொழுது இதை விட எங்களுக்கு வேறு என்ன அங்கீகாரம் வேண்டும் என்று ஒரு பெருமிதத்தோடு கூறி வருகின்றனர்.
செய்தியாளர்: இருவரின் காதலும் திருமணத்தில் போய் முடியப் போகிறது என்பதை நீங்கள் உணர்ந்துகொண்ட நிமிடம் உங்களுக்கு எப்படி இருந்தது?
- ஸ்ரீஜா: மனது முழுக்க பயம்தான் இருந்தது. ஏனெனில் இவ்வளவு காலமும் இந்த சமூகத்தை தனியாக இருந்து மகிழ்ச்சியாக எதிர்கொண்டுவிட்டோம். ஆனால் இனி கணவருடன் சேர்ந்து ஒரு திருநங்கையாக இந்த சமூகத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம். இந்தச் சமூகம் எங்கள் இருவரையும் கணவன் மனைவியாக அங்கீகரிக்குமா? அதை ஒப்புக் கொள்ளுமா? நாங்கள் இருவரும் என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றியச் சிந்தனைகள்தான் இருந்தன. ஆனால் இன்று அதே சமூகத்தில்தான் திருநங்கையாக இருந்த பலரும் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். உதாரணமாக காவல் துறையில் பிரித்திகா யாஷினி, அதுபோல் நீதித் துறையிலும், சமூக ஆர்வலராகவும் தங்களை ஒரு அடையாளமாக வைத்துக்கொண்டு சேவை செய்து வருகின்றனர். அதுபோல் நாமும் இந்தச் சமூகத்தை எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் என நம்பிக்கைக் கொண்டேன்.
செய்தியாளர்: உங்களின் திருமணத்தை பதிவு செய்து சான்று வழங்கவேண்டும் என அரசு அலுவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை நீங்கள் எப்படி வரவேற்கிறார்கள்?
- ஸ்ரீஜா: நிச்சயமாக மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம். இந்தச் சமூகத்தில் நாங்களும் மற்றவர்களைப் போல் ஒரு மனிதர்கள்தான். எங்களுக்கும் இச்சமூகத்தில் வாழ்வதற்கான எல்லாத் தகுதிகளும் உள்ளன என்பதை இந்த நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறது.
செய்தியாளர்: உங்கள் திருமணத்தை எதிர்த்த பலரும் இந்தத் தீர்ப்பிற்கு பிறகு உங்களை எப்படி பார்க்கிறார்கள்?
- ஸ்ரீஜா: அதைத் தெரிந்துகொள்ள நாங்களும் மிக ஆர்வமாக உள்ளோம். ஏனெனில் எங்களின் திருமணத்தை பலர் கேலி செய்து விமர்சித்திருந்தார்கள். அதிலும் ஒரு சிலர் நாங்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியாது என கூறி இருந்தார்கள். அதற்குக் காரணம் அரசால் அங்கீகரிக்கப்பட்டு திருமணப் பதிவுச் சான்று பெற்ற தம்பதியினரே குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியும். ஆகவே பதிவு செய்யப்படாத எந்த ஒரு தம்பதியும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியாது. கர்நாடகத்தில் ஆண் - திருநங்கையின் திருமணத்தை அங்கீகரித்து சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அங்கு சென்று உங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி இருந்தார்கள். அப்பொழுது எனக்குள் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். நான் பிறந்து வளர்ந்தது தூத்துக்குடி; எனது வாழ்வாதாரம் இங்குதான் அமைக்கப்பட்டு உள்ளது. ஆகவே நான் ஏன் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று எனது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆகவே தமிழ்நாட்டிலேயேதான் எங்களது திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கி இன்று அதில் வெற்றிபெற்றுள்ளோம்.
செய்தியாளர்: சாதகமான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து உங்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
- ஸ்ரீஜா: நீதிமன்றத்தின் உத்தரவினைத் தொடர்ந்து அதனுடைய உத்தரவு நகலை பெற்றுக்கொண்டு முதலில் எங்களுக்கு எங்கு திருமணம் நடைபெற்றதோ அங்குச் சென்று இருவரும் இறைவனின் சன்னதி முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொள்வோம். பின்னர் அங்கிருந்தே திருமணப் பதிவுச் சான்று அலுவலகத்திற்குச் சென்று எங்களின் திருமணத்தை பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்.