தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தொடங்கும் முன் ஸ்மார்ட் சிட்டி பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரவு பகலாக வேலை
அதன் ஒருபகுதியாக ஜெயராஜ் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி சாலை அமைக்கும் பணியில், கணேஷ் நகரை சேர்ந்த பிரபல கட்டிட காண்டிராக்டர் ஜெபர் சாமுவேலுக்கு சொந்தமான இம்மானுவேல் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரவுபணியில் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளரான குமாரபுரம் பகுதியை சேர்ந்த காமாட்சி நாதன் (22), தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஜோயல் ஆகியோர் பணி செய்து வந்தனர்.
அப்போது, சாலையின் வலதுபுறம் கட்டிட வேலை பொருட்கள் வைத்திருந்த கண்டெய்னர் பெட்டியை கிரேன் உதவியுடன் இடதுபுறமாக நகர்த்தும் பணி நடைபெற்றது. கிரேனை கோரம்பள்ளம் பி.எஸ்.பி.நகரை சேர்ந்த செய்யது அலி பாதுஷா (35) என்பவர் இயக்கினார்.கண்டெய்னர் பெட்டி சாலை தடுப்பில் மோதிவிடாமல் இருப்பதை கண்காணிக்கும் பொருட்டு காமாட்சி நாதனும், ஜோயலும் பணியில் ஈடுபட்டனர்.
நடுக்கத்தில் கிரேன் ஓட்டுநர்
இந்நிலையில் கிரேனை முன்னிருந்து பின்னோக்கி நகர்த்தும் போது பளுதூக்கி எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயரழுத்த மின் கம்பி மீது உரசியதில் பயங்கர தீப்பொறியுடன் மின்சாரம் கண்டெய்னர் பெட்டிக்கு பாய்ந்தது. மின்சாரம் கண்ணிமைக்கும் நேரத்தில் காமாட்சிநாதன் மீதும் பாய்ந்ததாக தெரிகிறது.
இதனால் பதற்றமடைந்த கிரேன் ஓட்டுநர் கண்டெய்னர் பெட்டியை தன் பிடியில் இருந்து விடுவித்துள்ளார். அப்போது கண்டெயன்ர் பெட்டி நேராக காமாட்சி நாதன் தலையில் விழுந்து அவரை அமுக்கியதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் உடனிருந்த ஜோயல் படுகாயமடைந்தார். இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்துக்கும், மத்திய பாகம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர் பலி
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கண்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த காமாட்சி நாதனை மீட்டனர். இதற்கிடையே அங்கு வந்த காவல்துறையினர், படுகாயமடைந்த ஜோயலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில் மத்தியபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான நிலையில், தற்போது ஸ்மாட்சிட்டி திட்டப்பணியில் ஒருவர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காப்பாற்றாத கடவுள் - விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்