தூத்துக்குடி : சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய மூன்று இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்துவருகின்றன. சிவகளையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்தப் பணியை பொறுத்தவரை சிவகளை பரம்பு பகுதியில் தற்போதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு நடைபெற்றுவரும் இந்த அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக சிவகளை பகுதியில் உள்ள ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் திரடு, ஆவாரங்காடு திரடு உள்பட ஐந்து இடங்களில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதில் ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக செங்கலால் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் ஆய்வு
இதனையொட்டி சிவகளை அகழ்வாராய்ச்சி பகுதியில் அமைச்சர்கள் ஆய்வை ஒட்டி சிவகளை பகுதியில் தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் அகழ்வாராய்ச்சியில் இருந்து மரபணு சோதனைக்கான எலும்பு உள்ளிட்ட உடல்பாக பொருள்களை கடந்த வாரம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு குழு வந்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
தற்காலிக அருங்காட்சியகம்
சுடுமண் பானை, மூடி, இரும்பு உலோகம், கோடாரி, பாண்டி விளையாட்டு உபகரணங்கள், களிமண் பொம்மை, கல்லால் செய்யப்பட்ட பந்து, உலோகங்களை சாணை பிடிக்கும் கல், பீங்கான் வளையல், செம்பு நாணயம், பானையில் பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், சிறிய பானை, சுடுமண் பொம்மை, கிண்ணம், குடுவை, இரும்பு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் அமைச்சர்கள் வருகைக்காக தற்காலிக அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “2 ஆயிரத்து 600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் தொன்மையை சிவகளை அகழ்வாராய்ச்சி எடுத்துக்காட்டி கூறுகிறது. சிவகளை நாகரிகம் தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான நாகரிகம். தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிவகளை ஒரு முக்கிய அடையாளமாகும். அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும்போது தமிழ்நாட்டில் சிவகளை ஒருமுக்கிய அடையாள சின்னமாக திகழும்.
சிவகளை, கீழடி உள்ளிட்ட பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகிறார். ஆதிச்சநல்லூர் பகுதியில் செம்பு பொருள்கள் கிடைத்துள்ளன.
சிவகளை பகுதியில் இரும்பாலான பொருள்களை கிடைத்துள்ளது. கொற்கை பகுதியில் கடல்சார் அகழ்வாராய்ச்சி நடத்த உள்ளோம். அதற்கான ஆலோசனை பூனே NIT பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்து வருகிறோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:
தனி யூனியன் பிரதேசம் ஆகிறதா மேற்கு மண்டலம்? - கொங்கு நாடு சர்ச்சை