தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 2017-18 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும், அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி அரசு தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன. 11) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து ஜாய்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் தமிழ்நாட்டில் சிறுபான்மை ஏழை, எளிய மாணவ மாணவிகள் தங்களது படிப்பினை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி கல்லூரிகளை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மடிக்கணினி கொள்முதல் விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் நேரத்தில் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.
மேலும் தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட்டம் நடத்தி வருகிறோம். அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் தெரிவித்து வருகிறோம்“ என அவர் தெரிவித்தார்.