தூத்துக்குடி: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தமிழ்நாடு சார்பில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதனடிப்படையில் இரண்டு கட்டமாக அத்தியாவசியப்பொருள்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலிருந்து ஒரு கப்பலிலும், தூத்துக்குடியிலிருந்து ஒரு கப்பலிலும் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 23) தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் 16 ஆயிரத்து 800 டன் நிவாரண பொருள்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த கப்பலை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்திலராஜ், தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுதுறை ஆணையர் ஜெசிந்தா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பொருள்கள் இரண்டு தினங்களில் இலங்கைக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா!!