தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் தொகுதி மக்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள இசைப் பிரியர்கள், கிராமியக் கலைஞர்கள் உள்ளிட்டோரும் இணைந்து இசைமேதை நல்லப்ப சுவாமிக்கு நினைவு மண்டபம் அமைத்து கௌரவிக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
மக்கள் பிரதிநிதிகளின் மூலம் இந்தக் கோரிக்கை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இசைமேதை நல்லப்ப சுவாமியின் நினைவை போற்றும் வகையில் விளாத்திக்குளத்தில் நினைவுத்தூண் அமைக்க 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நினைவுத் தூண் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்று, பணிகள் தொடங்கின.
தற்போது பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், இசைமேதை நல்லப்பசுவாமியின் நினைவுத்தூண் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை, காணொலிக் காட்சி மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்திலிருந்து திறந்துவைத்தார்.
தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் அவரது நினைவுத்தூணில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நல்லப்பசுவாமியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் 3 மாதங்களுக்குப் பிறகு மீன்பிடிப்புப் பணிகள் தொடக்கம்