தூத்துக்குடி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன் களப்பணியாளர்கள், கரோனா நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களை மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று (மே.15) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன் களப்பணியாளர்கள், கரோனா நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு உணவு பொட்டலங்களை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், உத்தரவுப்படி முன்களப்பணியாளர்கள், கரோனா நோயாளிகள், அவருடன் இருப்பவர்களுக்கு தினசரி மூன்று வேளையும் உணவு வழங்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் கோயில் நிர்வாகம் சார்பில் 650 பேருக்கு காலை உணவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆயிரம் பேருக்கு மதிய உணவும், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சார்பில் 300 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட உள்ளது. இந்த அளவு தேவையின் அடிப்படையில் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.