தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், காமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார 9 கிராமங்களில் பணிபுரியும் சலவை, முடித்திருத்தும் தொழிலாளர்கள், ஊனமுற்றோர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை கோவில்பட்டி வடக்கு மாவட்ட அதிமுக கழக சார்பில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மனித இனமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் தான் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்றினால் தான் கரோனா பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. நலவாரியத்தில் பதிவு செய்த தொழிற்சங்கங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 83 லட்சம் பேருக்கு 83 கோடி ரூபாயை மாநில முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
தீப்பெட்டித் தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, ஆயிரத்து 778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 21ஆயிரத்து 750 பேருக்கு உடனடியாக ஆயிரம் ரூபாய் கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பாதிப்பு குறைவாக இருக்கின்ற நிலை உள்ளது. அதே போலதான் தூத்துக்குடி மாவட்டத்தில் மூவாயிரத்து 560 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் பரிசோதனை செய்ததில், தொற்று உறுதி செய்யப்பட்ட 27 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் ஒருவர் மரணமடைந்த நிலையில், 25 பேர் பூரணமாக நலம் பெற்று வீடு திரும்பினர். மேலும் ஒருவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மாவட்ட நிர்வாகம் தொடர் கண்காணிப்பில் சிறப்பாக பணியாற்றியதின் மூலம் இந்த நிலையை தூத்துக்குடி மாவட்டத்தில் நிலைநிறுத்த முடிந்தது. விரைவில் தூத்துக்குடி மாவட்டம் பச்சை வண்ண நிலைக்கு வரும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
வெளி மாவட்டம், வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களை முறையாக கண்டறிய மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுங்கச்சாவடியில் காவல் துறையின் மூலமாக வருவாய்த் துறையின் மூலமாக ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி வந்தால், உடனடியாக அவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வருபவர்களைக் கண்டறிந்து பரிசோனை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை மே 3ஆம் தேதிக்குப் பிறகு விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரக்குழு ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிக்க: வெளிமாநில தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்ற உள்துறை அமைச்சகம்