சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய முக்கிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பேரணிகள், கலைநிகழ்ச்சிகள், ஹெல்மட் பேரணி போன்றவை நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் நேற்று தலைக்கவசம் அணிவது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தல், மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
பேரணியின்போது சாலையில் சென்ற பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அமைச்சர் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், 'தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்குகிறது. கடந்தாண்டு தேசிய அளவில் குறைவான விபத்துகளை ஏற்படுத்திய மாநிலம் என்ற பெருமையை பெற்ற தமிழ்நாடு மத்திய அரசிடமிருந்து விருதையும் பெற்றது.
போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து மக்களிடம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 13 சதவீதமாக உள்ள சாலை விபத்துகளை பூஜ்யமாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட போக்குவரத்துத் துறை மேற்கொண்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க: அதிமுக ஆன்மீக ஆட்சியை நடத்தி வருகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம்!