தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த பட்சிராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், "கடற்கரைப் பகுதியில் சிப்பிகளை சேகரித்து அதிலுள்ள மணல் நீக்கி, கடற்கரையிலேயே காளவாசல் அமைத்து, அதனை சுண்ணாம்புகளாக மாற்றி விற்பனை செய்வது வழக்கம். இது பாரம்பரியமான முறையில் பல காலமாக செய்து வரும் சிறுதொழில். இத்தொழிலை வர்த்தக ரீதியாக செய்யும் சிலர், சிப்பிகளை சேகரிக்க, மீன்பிடி இயந்திரப் படகுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
குலசேகரப்பட்டினம் கடற்கரை பகுதியில் 16 இயந்திரப் படகுகள் மூலம் 160 பேர் ஒன்றிணைந்து, கடற்கரையிலிருந்து ஏழு கிலோமீட்டர் கடலின் உள்பகுதிக்குச் சென்று, சிப்பி மணல் மற்றும் தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை எடுத்து வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த வகையில் ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் டன் சிற்பி, கடலின் உள்பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. இதனை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதால், கடற்கரை கிராமங்களில் தார்ச்சாலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலின் உட்பகுதியில் தோண்டுவதால் பவளப்பாறைகள், சங்குகள், கடல் அட்டைகள், கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வருவதும் தடைபட்டுள்ளது. குலசேகரப்பட்டினம், மணப்பாடு, ஆலந்தலை, திருச்செந்தூர் கோயில் கடற்கரைகளின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சிப்பிகளைத் தோண்டி எடுக்க மத்திய, மாநில அரசுகள் எவ்விதமான அனுமதியும் வழங்கவில்லை. இருப்பினும் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சிப்பிகள் கொள்ளைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே கடல் வளங்களை கொள்ளையடிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:’கடலில் இப்படியெல்லாம் உயிரினங்கள் இருக்கா?' - அரியவகை மீன்களின் புகைப்படத் தொகுப்பு!