நீட் தேர்வைக் கண்டித்து சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் பாதை இயக்க நிர்வாகிகளை காவல் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைதுசெய்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் பாதை இயக்க ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அராஜக போக்கைக் கண்டித்து மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மக்கள் பாதை இயக்க ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் பாதை இயக்க நிர்வாகிகளை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். காவல் துறையினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான போக்கு கண்டனத்திற்குரியது.
ஸ்டெர்லைட் போராட்டம், சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை-மகன் மரணத்தைத் தொடர்ந்து தற்போது நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய தோழர்கள் மீது காவல் துறையினர் அராஜக போக்கை கையாண்டு உள்ளனர். இதனைத் தடுத்து நிறுத்திட வேண்டும். ஆகவே மக்கள் பாதை இயக்க நிர்வாகிகள் மீது அராஜகமாக நடந்துகொண்ட காவல் துறையினரை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.