குவைத் நகரம்: குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,அந் நாட்டின் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இருநாடுகளின் தலைவர்களும் பரஸ்பரம் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தியா வருமாறு அழைப்பு: இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Thank you Kuwait! This visit was historic and will greatly enhance our bilateral relations. I thank the Government and people of Kuwait for their warmth. I also thank the PM of Kuwait for the special gesture of coming to the airport for the see-off. pic.twitter.com/2WPKwPtXkT
— Narendra Modi (@narendramodi) December 22, 2024
பாரம்பரிய மருத்துவம், விவசாய ஆராய்ச்சியில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது குறித்தும் இருநாடுகளின் தலைவர்களும் ஆலோசித்தனர். சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள், தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன், கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாடுகளின் பிரதமர்கள் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டன. அப்போது இந்தியா வருமாறு குவைத் பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
ஒப்பந்தங்கள் கையெழுத்து: பாதுகாப்புத் துறையில் இந்தியா-குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும். பரஸ்பரம் பயிற்சி மேற்கொள்ளுதல், பணியாளர்கள், நிபுணர்கள் பரிமாற்றம், பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.
Held fruitful discussions with HH Sheikh Ahmed Abdullah Al-Ahmed Al-Sabah, the Prime Minister of Kuwait. Our talks covered the full range of India-Kuwait relations, including trade, commerce, people-to-people ties and more. Key MoUs and Agreements were also exchanged, which will… pic.twitter.com/dSWV8VgMb8
— Narendra Modi (@narendramodi) December 22, 2024
மேலும் இருநாடுகளுக்கு இடையே 2025-2029 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற மேற்கொள்ளப்படுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. கலை, இசை, நடனம், இலக்கியம், நாடகம் ஆகியவற்றில் கலாச்சார பரிமாற்றங்கள், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு, பரஸ்பரம் இந்த துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மேற்கொள்ளுதல் விழாக்களை நடத்துதல் ஆகியவற்றிற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
இது தவிர 2025-2028ஆம் ஆண்டு வரை விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான திட்டத்திலும் கையெழுத்திடப்பட்டது. இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், விளையாட்டுத் தலைவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, நிகழ்வுகள், திட்டங்களில் பங்கேற்பது, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு ஊடகம், விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது என திட்டமிடப்பட்டுள்ளது.