தூத்துக்குடி: கரிசல் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன். கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தினை சேர்ந்த இவர், கடந்த மாதம் 17ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்படி, அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எழுத்தாளர் கி.ரா.விற்கு சிலை
முதுபெரும் எழுத்தாளர் கி.ரா.விற்கு புகழ் சேர்க்கும் வகையில், கோவில்பட்டியில் அவரது திருவுருவ சிலை அமைக்கப்படும், அவர் படித்த பள்ளி மேம்படுத்தப்பட்டு கி.ராவின் புகைப்படங்கள், படைப்புகள் அடங்கிய அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில் ராஜ் ஆகியோர், கோவில்பட்டியில் மறைந்த எழுத்தாளர் கி.ராவிற்கு சிலை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக இன்று (ஜூன் 5) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
சிலை அமைக்க ஆய்வு
கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள ராமசாமி தாஸ் பூங்கா, இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம், வெங்கேடஷ் நகர் பகுதியில் உள்ள நகராட்சி பூங்கா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளாகம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, ’தமிழ்நாட்டில் முதல்முறையாக எழுத்தாளர் கி.ராவின் மறைவுக்கு தான் அரசு மரியாதை செய்யப்பட்டது. அவருக்கு சிலை அமைப்பதற்காக இடத்தினை பார்வையிட்டுள்ளோம். எந்த இடத்தில் அமைக்கலாம் என்று அரசு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் சிலை அமைக்கும் இடம் தேர்வு செய்யப்படும்’எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கி.ரா கதையாக்கத்தில் உருபெற்ற 'ஒருத்தி'