இலங்கை அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கனமழை பெய்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை எனத் தகவலறிந்த கனிமொழி, மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து கரைதிரும்பாத மீனவர்களை மீட்டு உடனடியாக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்தார். அதன்பேரில் இந்திய கடலோரக் காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் பலனாக கடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக கரைக்கு கொண்டுவரப்பட்டனர். இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தருவைகுளம் மீனவர்கள் கனிமொழியை, முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், ''புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு மோசமான வானிலை காரணமாக பல மீனவர்கள் கரை திரும்பமுடியாத நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திலிருந்து ஐந்து படகுகளில் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதுதொடர்பாக மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.
தொடர்ந்து கரைதிரும்பாத மீனவர்களைப் பத்திரமாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கைவிடுத்தேன். மத்திய உள் துறை அமைச்சருக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். அதன் பயனாக கடலில் மினிகாய்தீவில் சிக்கித்தவித்த தூத்துக்குடி மீனவர்களை மீட்டு இந்திய கடலோரக் காவல் படையினர் கரைக்கு அழைத்து வந்துள்ளனர். மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கும் மத்திய உள் துறை அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் குளங்கள் தூர்வாரும் பணி சரியாக நடைபெறவில்லை. குளங்களுக்கு தண்ணீர் வந்துசேரும் நீர் வழித்தடங்கள் சரியாக சீரமைத்து செப்பனிடப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய தண்ணீர் பிரச்னையை சந்தித்த பிறகும், தூர்வாரும் பணிகள் ஒழுங்காகச் செய்யாதது, அரசு மக்களுக்கு செய்யும் துரோகம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் கனிமொழி ஆய்வு!