மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டு எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய 'சூல்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள உருளைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ. தருமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் தமிழறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனை நேரில், சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்குப் புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது, கோவில்பட்டிக்குக் கிடைத்த பெருமை. கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த வேண்டும். இயற்கை மண் வளத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் நாவல் தான் சூல். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு மன்னர் காலத்திலிருந்தே குடிமராமத்துப் பணிகளை இன்று தமிழ்நாடு அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
82 ஆண்டுகளாக தூர்வாரப்படாத மேட்டூர் அணை முதல் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் வரை தூர்வாரப்பட்டது. மழை நீரை வீணாக்காமல் மக்கள் பயன்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டுள்ளது. இந்த நூலின் மையக் கருத்தும் அதனை வலியுறுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: ‘பைக்கில் மின்னல் வேகம்’ - இரவில் செல்போன் திருடும் கும்பல்; 6 பேர் கைது!