கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டி முடி எஸ்டெட் பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் பெரும்பாலும் கயத்தாறு பேரூராட்சி பாரதிநகரைச் சேர்ந்தவர்கள்தான் பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக எஸ்டெட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்த கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோகத்தில் மூழ்கினர்.
பின்னர், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் சென்று உயிரிழந்தவர்களின் பட்டியலை வழங்கும்படி அப்பகுதியினர் கேட்டனர். வட்டாட்சியர் அளித்த பட்டியலில் கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேரந்தவர்களின் பெயர் இல்லாவிட்டாலும், தங்களது உறவினர்கள் அந்த எஸ்டெட்டில்தான் வேலை பார்த்ததாகவும், அவர்களின் நிலை குறித்த தகவல்களைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் பாரதி நகர் பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் பெட்டி முடி எஸ்டெட்டில் பணிபுரிந்த அவர்களது உறவினர்கள் குறித்த தகவல்களைப் பெற்று வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.
இதையும் படிங்க: மூணாறில் கடும் நிலச்சரிவு – 80 பேர் வரை காணவில்லை; 5 பேர் சடலமாக மீட்பு!